உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ராமேஸ்வரம்- சென்னை ரயில் நெரிசலில் தவிப்பு: கூடுதல் ரயில் இயக்குவது அவசியம்   

ராமேஸ்வரம்- சென்னை ரயில் நெரிசலில் தவிப்பு: கூடுதல் ரயில் இயக்குவது அவசியம்   

சிவகங்கை:ரமேஸ்வரத்தில் இருந்து சென்னை, திருச்சி செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதால் பயணிகள் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி வழியாக (போட் மெயில் ரயில்) தாம்பரம் மற்றும் ராமேஸ்வரம் முதல் மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக (பாம்பன் எக்ஸ்பிரஸ்) சென்னை, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு (சேது எக்ஸ்பிரஸ்) ஆகிய மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. மாநில தலைநகரான சென்னையுடன், புண்ணியஸ்தலமான ராமேஸ்வரத்தை இணைக்கும் விதத்தில் இந்த ரயில் சிவகங்கை, காரைக்குடி வழியாக இயக்கப்படுவதால் வடமாநில யாத்ரீகர்கள் மட்டுமின்றி, ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த ரயில்களில் 22 பெட்டிகள் வரை இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பயணிகள் வரத்து அதிகரிப்பால் தினமும் கூட்ட நெரிசலில் தான் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதே போன்று ராமேஸ்வரத்தில் (வண்டி எண்:16850) தினமும் மதியம் 2:50 மணிக்கு புறப்படும் ரயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக திருச்சிக்கு இரவு 8:05 க்கு சென்று சேர்கிறது. மாலைநேர பணி முடிந்து சொந்த நகரங்களுக்கு செல்ல ஏற்ற ரயிலாக இருப்பதால் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிக்கு செல்லும் பயணிகள் அதிகளவில் பயணிக்கின்றனர். இந்த ரயிலில் தலா ஒரு மாற்றுத்திறனாளி, பெண் பயணிக்கான பெட்டிகளுடன் 9 ரயில் பெட்டிகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் வழக்கமான நாட்களிலேயே கூட்டம் அதிகரித்து படிகளில் அமர்ந்தும், ரயிலுக்குள் பாதையில் நின்றபடி பல மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது போன்று ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ், திருச்சி செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண தெற்கு ரயில்வே நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என ரயில் பயணிகள் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். * கூடுதல் பெட்டி, அந்தியோதயா தேவை: இது குறித்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது, சென்னை செல்லும் ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க திருநெல்வேலி - தாம்பரம் (மானாமதுரை, காரைக்குடி வழி) வரை அந்தியோதயா விரைவு ரயிலை இயக்க வேண்டும். காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி செல்லும் பயணிகளின் வசதிக்காக காரைக்குடி - மன்னார்குடி ரயிலை மானாமதுரை வரை கண்டிப்பாக நீட்டிக்க வேண்டும்.ராமேஸ்வரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகளை இணைத்து ஓட்ட வேண்டும். இதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ///


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ