சிராவயல் மஞ்சுவிரட்டுக்கு காப்பீடு செய்ய தயக்கம் பார்வையாளர்கள் அரங்கம் விரிவு படுத்தப்படுமா
நாச்சியாபுரம் : பொங்கல் விழாவை முன்னிட்டு திருப்புத்துார் அருகே சிராவயலில் நடத்தப்படும் மஞ்சுவிரட்டுக்கு விதிமுறைகளின்படி காப்பீடு செய்ய கம்பெனிகள் முன் வராததால் காப்பீடு செய்ய முடியாமல் ஏற்பாட்டாளர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கும் காப்பீடு முறையை முறைப்படுத்தவும், சிராவயலில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமரும் வகையில் மஞ்சுவிரட்டு விளையாட்டரங்கம் அமைக்க வேண்டுமென மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.பொங்கல் விழா என்றாலே தென் மாவட்டங்களில் களை கட்டுவது 'மஞ்சுவிரட்டு' தான். தற்போது பல விதிமுறைகள் உருவாக்கி ஜல்லிக்கட்டு, எருது கட்டு, வடமாடு' என்று பல பெயர்களில் காளைகள் விளையாட்டு நடத்தப்பட்டாலும். தென் மாவட்ட கிராமங்களில் பாரம்பரிய மஞ்சுவிரட்டு அனுமதியின்றி நுாற்றுக்கணக்கான இடங்களில் நடத்தப்படுகிறது. குறிப்பாக சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகமாக மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. மஞ்சுவிரட்டு என்றாலே திருப்புத்துார் அருகே சிராவயல் பொட்டலில் நடத்தப்படும் காளை அவிழ்ப்பு தான் பலருக்கும் நினைவிற்கு வரும். 400 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டுள்ளது. தயங்கும் நிறுவனங்கள் தற்போதைய வழிகாட்டுதலில் பல விதிமுறைகள் உள்ளதால் ஜல்லிக்கட்டு பாணியில் சிராவயலில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. இருப்பினும் காளைகளை கொண்டு வருபவர்களால் விதியை மீறி அனுமதிக்கப்படாத இடங்களில் 'கட்டுமாடுகள்' அவிழ்க்கப்படுகின்றன. இதனால் வருவாய்த் துறையினரும், போலீசாரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். காயங்களும் அதிகரிக்கின்றன. மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் அரசு மஞ்சுவிரட்டுக்கான தனி வழிமுறைகள் அறிவிக்கக் கோரியும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் காயமடைபவர்கள், இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்கிறது. மேலும் காப்பீடு கம்பெனிகள் காப்பீடு திட்டத்தை நடை முறைப்படுத்த தயங்குகின்றன. பார்வையாளர்களுக்கு காப்பீடு கடந்த ஆண்டு சிராவயல் மஞ்சுவிரட்டிற்கு காப்பீடு செய்ய 3க்கும் மேற்பட்ட காப்பீடு கம்பெனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு எந்த காப்பீடு கம்பெனியும் மஞ்சுவிரட்டிற்கு காப்பீடு செய்ய முன்வராததால் சிராவயல் மஞ்சுவிரட்டு நிர்வாகம் காப்பீடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அரசு தலையிட்டு காப்பீடு செய்வதற்கான கம்பெனியை தேர்வு செய்யவும், காப்பீடு முறையை எளிமையாக்கவும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மாடு பிடி வீரர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யும் முறையை அறிமுகப்படுத்த கோரியுள்ளனர். மஞ்சுவிரட்டு விளையாட்டரங்கம் பார்வையாளர்களை பாதுகாக்க கூடுதல் காலரி வசதியை பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில் சிராவயலில் சில நுாறு பேருக்கே காலரி வசதி உள்ளது. முதலில் அமைச்சர் பெரியகருப்பன் காலரி கட்ட தொகுதி நிதி ஒதுக்கினார். தொடர்ந்து உள்ளாட்சி நிதியில் சிறிய காலரி கட்டப்பட்டது. தற்போது எம்.பி., நிதியில் கூடுதல் காலரி கட்டப்படுகிறது. இருப்பினும் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கூடும் மைதானத்தில் பார்வையாளர்கள் அமர இடமில்லை. இங்குள்ள 100 ஏக்கர் மைதானத்தில் தை 3ல், நுாற்றுக்கணக்கில் காளைகள் விளையாடுவதும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிவதும் பல ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம் ஆகும். இங்கு பர்வையாளர் மாடம், தொழு, மாடுபிடி வீரர்களுக்கு அறை, காளைகளுக்கு தொழு, மருத்துவ அறை வசதிகளுடன் மஞ்சு விரட்டு விளையாட்டரங்கம் அமைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.