வாஷிங்டன் கரீனாவை கரம் பிடித்த சிவகங்கை பிரபு: ஹிந்து முறைப்படி திருமணம்
நாச்சியாபுரம்: அமெரிக்கா வாஷிங்டன் பெண் கரீனாவை 25, காதலித்த சிவகங்கை மாவட்டம் கீழையபட்டியை சேர்ந்த பிரபு 35, நேற்று ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் கீழையப்பட்டி முருகானந்தம் மகன் பிரபு. பொறியியல் பட்டதாரியான இவர் 2014 ல் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றிருந்தார். படிப்பை முடித்தபின் இன்டெல் நிறுவனத்தில் 10 ஆண்டாக பணிபுரிந்து வருகிறார். அங்கு நடக்கும் நடன நிகழ்ச்சிகளை பார்க்க சென்றபோது நடனமாடிய வாஷிங்டன் கரீனாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வாஷிங்டன் மாகாணம் உட்லேண்ட்யை சேர்ந்த பிரியன் ரேல்- கிறிஸ்டினா ராபின்சன் தம்பதியரின் மகளாவார். தமிழகத்திற்கு வந்து பரதநாட்டியம் கற்க ஆசைப்படுவதாக பிரபுவிடம் தெரிவித்தார்.இதனையடுத்து கரீனாவை தமிழகத்திற்கு அழைத்து வந்த பிரபு, கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில், மகாபலிபுரம் உட்பட பாரம்பரிய கலாசார சுற்றுலா தலங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இவர்கள் அமெரிக்கா திரும்பினர். இதனிடையே தமிழ் கலாசாரத்தின் மீது ஆர்வமுள்ள கரீனாவுக்கு, நட்பாக இருந்த பிரபு மீது காதல் மலர்ந்தது. தொடர்ந்து 5 ஆண்டாக காதலித்த இவர்கள், தங்கள் விருப்பத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இரு தரப்பினரும் சம்மதம் தெரிவிக்கவே, நேற்று பிரபுவின் சொந்த ஊரான கீழையப்பட்டியில் ஹிந்து கலாசார முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமக்களின் பெற்றோர், கிராமத்தினர் தம்பதியரை வாழ்த்தினர்.