அரசு பள்ளியில் இலவச நோட்டு கரையான் அரிக்கும் அவலம்
திருப்புத்துார்: திருப்புத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கல்வித்துறைக்கான அறையில் கரையான் அரிக்கும் நிலையில் மாணவர்களுக்கான இலவச நோட்டுக்கள் உள்ளது. இதனை பாதுகாக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.திருப்புத்துார் ஆ.பி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 வகுப்பறை கொண்ட கட்டடம் கூட்ட அரங்கமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.திருப்புத்துார் கல்வி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட போது, மாவட்ட கல்வி அலுவலகத்திற்காக இந்த கூட்ட அரங்கம் பயன்படுத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பாக சிவகங்கை ஒருங்கிணைந்த கல்வி மாவட்டமாக மாறிய பின்னர் இந்தக் கட்டடம் பள்ளியிடம் ஒப்படைக்கப்படவில்லை.தொடர்ந்து கல்வித்துறையினர் கோடவுனாக பயன்படுத்தி வந்தனர். அரசுபள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நோட்டு,புத்தகங்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது.அண்மையில் நடைப்பயிற்சி சென்றவர்கள் திறந்து கிடந்த ஜன்னல் வழியாக பார்த்த போது கட்டுக்கட்டாக நோட்டுக்கள் வீணாக கிடப்பதும், அதில் சிலவற்றில் கரையான் அரிக்க துவங்கியுள்ளதையும் பார்த்து கவலை தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக மாணவர்களுக்கு நோட்டுக்களை வழங்காமல் வைத்திருப்பதையும், தற்போது கரையான் அரிக்கும் நிலையில் நோட்டுக்கள் வீணாவதற்கும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இருக்கும் நோட்டுக்களை பாதுகாக்கவோ, அல்லது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி விட்டு கட்டடத்தை பள்ளி பயன்பாட்டிற்கு ஒதுக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.