உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  குப்பை கிடங்காக மாறும் மயானம் திருப்புவனம் மக்கள் வேதனை

 குப்பை கிடங்காக மாறும் மயானம் திருப்புவனம் மக்கள் வேதனை

திருப்புவனம்: திருப்புவனம் புதுார் மயானத்தில் நகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய கூட இடமின்றி தவித்து வருகின்றனர். திருப்புவனத்தில் புதுார், கோட்டை நெல்முடிக்கரை ஆகிய இடங்களில் பொதுமயானம் செயல்பட்டு வருகிறது. திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருப்புவனத்தில் குப்பை கிடங்கு நிரம்பி விட்டதால் நகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை ஆங்காங்கே தீ வைத்து எரித்து வந்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பவே திருப்புவனம் புதுார் மயானத்தில் குப்பையை டன் கணக்கில் கொட்டி வருகின்றனர். அழுகிய பழங்கள், இறைச்சி கழிவு, பிளாஸ்டிக் கழிவு, உயிரிழந்த நாய், பூனை உள்ளிட்ட அனைத்தையும் மயானத்தில் கொட்டி வருவதால் துர்நாற்றம் வீசுவதுடன் மழை காலத்தில் புழுக்கள் உற்பத்தியாகி மயானம் முழுவதும் பரவி வருகிறது. உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய வருபவர்கள் துர்நாற்றத்தால் தவித்து வருகின்றனர். மயானத்தை ஒட்டி பழையனூர் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் உள்ளது. சமீபத்தில் பொதுப்பணித்துறை இந்த கால்வாயை தூர்வாரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்த நிலையில் கரையில் தொடர்ச்சியாக கொட்டப்படும் குப்பை கால்வாயிலும் விழுந்து வருகிறது. பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ச்சியாக குப்பையை கொட்டி மாசுபடுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் குப்பை கொட்ட தனியாக புதிய இடத்தை தேர்வு செய்ய வேண்டும் மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து அழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ