டிப்பர் லாரி - கார் மோதல்: 2 பேர் பலி; இருவர் காயம்
திருப்புத்தூர்: டிப்பர் லாரி -- கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே புதுப்பட்டியில் நேற்று காலை, 11:00 மணிக்கு டிப்பர் லாரி கண்டவராயன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இரட்டை கண்மாய் அருகே எதிரே வந்த காரும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், காரில் பயணித்த கோவில்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன், 40, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிய சிங்கம்புணரியை சேர்ந்த அஸ்வின், 34, காரில் அமர்ந்திருந்த சூர்யா, 24, குருமூர்த்தி, 24, ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில், சூர்யா சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருப்புத்துார் போலீசார், டிப்பர் லாரி டிரைவர் என்.புதுாரை சேர்ந்த செல்வகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.