தனியார் மூலம் டிரைவர், கண்டக்டர் நியமனம் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு
சிவகங்கை:தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனம் மூலம் டிரைவர் கண்டக்டர்களை பணி அமர்த்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் விஜயசுந்தரம் தெரிவித்தார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் தான் கடைகோடி கிராமத்திற்கும் சேவையாற்றுகிறது. கோயம்புத்துார் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த முறையில் டிரைவர் கண்டக்டர்களை தனியார் நிறுவனம் மூலம் 8 மணி நேரப் பணிக்கு டிரைவருக்கு ரூ.1041, கண்டக்டருக்கு ரூ.1030ம் சம்பளம் நிர்ணயம் செய்து 148 டிரைவர்கள், 175 கண்டக்டர் நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 1977ம் ஆண்டு பட்டாபிராமன் குழு அறிக்கையின்படி ஒரு பஸ்சிற்கு 7.5 நபர் இருக்க வேண்டும். தற்போது ஒரு பஸ் இயக்குவதற்கு 5.93 பேர் தான் உள்ளனர். 20ஆயிரம் பஸ்களை இயக்க ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. 39 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனம் மூலம் ஓட்டுதல் திறன் பயிற்சி பெற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். எனவே அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனியார் நிறுவனம் மூலம் டிரைவர் கண்டக்டர்களை பணி அமர்த்துவதை கைவிட்டு அரசே நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கான டிஏ உயர்வு நிலுவைத் தொகை, ஓய்வு காலப் பணப்பலன் உடனடியாக வழங்கவேண்டும் என்றார்.