வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை
சிவகங்கை: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை பெறாமல் உள்ள இளைஞர்கள் அரசின் மாத உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழக அரசு அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, எந்தவித வேலையும் கிடைக்காமல், உயிர் பதிவேட்டில் காத்திருப்போருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.9ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 10ம் வகுப்பு தோல்வியுற்றோருக்கு மாதம் ரூ.200, 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ.400, பட்டதாரிக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு இந்த உதவித்தொகை, மனுதாரரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் பயன் பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு முடிந்திருக்க வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், பிறர் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் குடும்ப ஆண்டு வருவாய் ரூ.72,000க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு சலுகை
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு செய்தவர்கள், உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம். வருமான உச்சவரம்பு இல்லை. தொடர்ந்து 10 ஆண்டு வரை உதவி தொகை கிடைக்கும். 10 ம் வகுப்பு, அதற்கு கீழ் படித்தால் மாதம் ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ.750, பட்டதாரிக்கு ரூ.1000 வீதம் வழங்கப்படும். ஆனால், அரசின் வேறு எந்த உதவி தொகையும் பெறக்கூடாது. தகுதியுள்ள பட்டதாரிகள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து உதவி தொகை பெறலாம், என்றார்.