திருப்புவனத்தில் எரியாத தெரு விளக்குகள்
திருப்புவனம்: திருப்புவனத்தில் கடந்த நான்கு நாட்களாக தெரு விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் இருட்டில் அச்சத்துடன் நடமாடி வருகின்றனர். திருப்புவனத்தில் 18 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 30 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதுப்புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. பேருராட்சி சார்பில் தெருக்கள், ரோடுகள், முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின் விளக்குகள், எல்.இ.டி ,விளக்குகள், சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டு பேரூராட்சி நிர்வாகம் பராமரித்துவருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக திருப்புவனம் புதூர் பகுதியில் தெரு விளக்குகள் எரிவதில்லை. சோலார் விளக்குகள் மட்டும் வெளிச்சம் தருகின்றன. திருப்புவனத்தில் வசிக்கும் பலரும் மதுரை, சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பணிகளில் உள்ளனர். இரவில் பணி முடிந்து வருபவர்கள் தெரு விளக்குகள் எரியாததால் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது. 10:00 மணிக்கு மேல் பிரதான சாலையில் உள்ள டீ கடைகள், மளிகை கடைகளை மூடிவிடுவதால் பெண்கள் அச்சத்துடன் வர வேண்டியுள்ளது. எனவே தெருவிளக்குகளை முறையாக எரிய செய்ய வேண்டும்.