வாகனங்களை அடகு வைத்து மோசடி
சிங்கம்புணரி:தமிழகத்தில் வாகனங்களை அடகு வைக்கும் கும்பல் அதே காரை திருடி அடகு வாங்கியவரிடமே பணம் பறிக்கும் சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த இளையபரணி திண்டுக்கல்லைச் சேர்ந்த அப்துல் லத்தீப்பிடம் ரூ.12 லட்சம் மதிப்புள்ள காரை ரூ.2 லட்சத்துக்கு அடகுக்கு வாங்கி ஓட்டினார். மூன்றே நாளில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே திருக்களம்பூரில் உள்ள தோட்டத்தில் நிறுத்தியிருந்த காரை காணாததால் அதிர்ச்சியுற்றார். அடகிற்கு வாங்கியதற்கான ஆவணங்கள் இல்லாத நிலையில் போலீசாருக்கு சென்றாலும் புகார் கொடுக்க முடியாது என கருதி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார்.ஒரு நபர் சாவகாசமாக வந்து சாவி போட்டு காரை திறந்து எடுத்து சென்றது தெரியவந்தது. ஒரிஜினல் சாவி இல்லாமல் அக்காரை திறக்க முடியாது என்பதால் தன்னிடம் அடகு வைத்த கும்பல் தான் மோசடியாக காரை எடுத்துச் சென்று இருக்க வேண்டும் என்று நினைத்து அப்துல் லத்தீப்பை தொடர்பு கொண்டுள்ளார். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.இளையபரணி நண்பர்களுடன் அப்துல் லத்தீப்பை தேடி திண்டுக்கல் சென்றார். போலீசாரிடம் சென்று விடுவாரோ என்று பயந்த அப்துல் லத்தீப் இளையபரணியை காரை தான் அடகு பெற்ற திருப்பூருக்கு அழைத்துச் சென்றார். அப்போது தான் திருப்பூரை சேர்ந்த ஒருவர் அந்த காரை அப்பகுதியில் உள்ள சபி என்பவருக்கு ரூ.80 ஆயிரத்துக்கு அடகு வைத்ததும், அவர் அப்துல்லத்தீப்பிடம் அந்த காரை ரூ.1.50 லட்சத்துக்கு மறு அடகு வைத்ததும் தெரிந்தது. பிறகு அப்துல்லத்தீப் ரூ.2 லட்சத்துக்கு இளையபரணியிடம் மீண்டும் அடகு வைத்ததும் தெரிய வந்தது.ஒரு வழியாக அங்குள்ள ஒரு சமுதாய ஆபீஸில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இளையபரணியிடம் பெற்ற அடகு பணம் ரூ.2 லட்சம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. கடைசிவரை அந்த காரை யார் எடுத்துச் சென்றனர் என்பதை தெரிவிக்க மறுத்து விட்டனர். இதுபோல பலர் வாகனங்களை பறிகொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இளையபரணி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.