உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நேரம் தவறி இயக்கப்படும் டவுன் பஸ்கள் கிராம மக்கள் அதிருப்தி

நேரம் தவறி இயக்கப்படும் டவுன் பஸ்கள் கிராம மக்கள் அதிருப்தி

திருப்புவனம்: திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு நேரம் தவறி இயக்கப்படும் பஸ்களால் போக்குவரத்து கழகத்திற்கும் கிராமமக்களுக்கும் எந்த வித பயனும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்புவனத்தைச் சுற்றிலும் மழவராயனேந்தல், பழையனுார், ஏனாதி, கரிசல்குளம் உள்ளிட்ட 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், கூலி வேலை என அனைத்திற்கும் மதுரை சென்று வருகின்றனர். காலை 7:00 மணிக்கு மேல் புறப்படும் கிராமமக்கள் மதுரைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்புகின்றனர். கிராமமக்கள் பயன்பெற மதுரை கோட்டத்தின் கிளை பணிமனை திருப்புவனத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 44 டவுன் பஸ்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படுகிறது.தினசரி இரண்டு முதல் ஐந்து முறை கிராமங்களில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்டு வந்தது. டவுன் பஸ்களை நம்பி கிராமங்களில் இருந்து கீரை, மல்லிகை பூ, கத்தரி, வெண்டை உள்ளிட்ட பொருட்களை மதுரைக்கு சென்று விற்பனை செய்து வந்தனர்.குறிப்பிட்ட கால அட்டவணைப்படி இயக்கப்பட்டு வந்த டவுன்பஸ்கள் கடந்த சில மாதங்களாக நேரம் தவறி இயக்கப்படுகிறது. அதிகாலை ஐந்து மணி, மதியம் ஒரு மணி, இரவு பத்து மணி என நேரம் தவறி இயக்கப்படுவதுடன் முறையாகவும் வருவதில்லை. இதனால் டவுன் பஸ்களை நம்பிய கிராமமக்கள் ஷேர் ஆட்டோக்களை நம்பியே பயணம் செய்ய வேண்டியுள்ளது.தவத்தாரேந்தல் பிரியா கூறுகையில்: தவத்தாரேந்தலில் இருந்து மல்லிகை, ரோஜா, கொய்யாப்பழம் உள்ளிட்டவை மதுரைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டன. காலை 7:30க்கு வந்த டவுன் பஸ் தற்போது அதிகாலை 5:30 மணிக்கே சென்று விடுகிறது. அதிகாலையில் வருவதால் யாருமே பஸ்சில் பயணம் செய்யாமல் காலியான பஸ்களாக இயக்கப்படுகிறது.இதனால் ஷேர் ஆட்டோவை நம்பியே சென்று வருகின்றோம் என்றார்.கிராமங்களுக்கு இயக்கப்படும் பல பஸ்கள் பழுதானவையாக இருப்பதுடன் பாதி வழியில் அடிக்கடி நின்று விடுகிறது.போக்குவரத்து கழகங்கள் கிராமங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முறையாக பராமரிக்கப்பட்ட டவுன் பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை