உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு முடக்கம்; அரசு ஊழியர்கள் சங்கம் போராட முடிவு

அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு முடக்கம்; அரசு ஊழியர்கள் சங்கம் போராட முடிவு

சிவகங்கை ; ''அரசு ஊழியர்கள் பெற்று வந்த அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு முடக்கியது போன்ற அரசின் நடவடிக்கையை கண்டித்து நாளை முதல் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த உள்ளோம்,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.தமிழ்செல்வி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த ஒரு கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 2 ஆண்டு கால அகவிலைப்படி, ஆண்டுதோறும் பெறும் ஈட்டிய விடுப்பை முடக்கியுள்ளனர். கருணை அடிப்படை பணி நியமனம் 25ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. காலி பணியிடங்களை நிரப்பாததால் இளைஞர்களின் அரசு பணி கனவு நிறைவேறாமல் போனது. முதல்வர் ஸ்டாலின் கடந்த 6 மாதங்களுக்கு முன் விழா ஒன்றில் பேசியபோது, தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றியாக கூறியுள்ளார்.நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலக ஆலோசனை கூட்டத்தில் நிதி சாரா கோரிக்கையை நிறைவேற்றி, நிதி சார்ந்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்பது போல் பேசியதாக அறிகிறோம். உண்மையிலேயே நிதிநிலை சரியில்லையென்றால் முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அரசின் நிதிநிலை சீராகும் வரை எங்களுக்கு சம்பளம் வேண்டாம் என அறிவிப்பார்களா.

பங்களிப்பு ஓய்வூதிய சந்தா தொகை எங்கே

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்த பங்களிப்பு ஓய்வூதிய சந்தாத்தொகை பல கோடி ரூபாய் அரசால் தவறுதலாக கையாளப்படுகிறது. போக்குவரத்து கழக ஊழியர்கள் தற்போது ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அதே நிலை அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் விரைவில் ஏற்படலாம். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், நம்மை ஏமாற்றிய இந்த அரசுக்கு 2026 தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்.நேற்று கரூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டமுடிவின்படி நாளை (நவ.,12) அனைத்து அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும். அதனை தொடர்ந்து பிரசார இயக்க கூட்டமும், 2025 பிப்.,8 ல் திருச்சியில் காலமுறை சம்பளம் வழங்க கோரி, தொகுப்பூதிய ஊழியர்களின் மாநில மாநாடு நடத்தப்படும். பிப்.,22 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி