தாது மணல் அள்ள எதிர்ப்பு கலெக்டரிடம் மக்கள் மனு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை வடகாடு மற்றும் திருவாரூர் மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் அய்யர் தோப்பு என்ற இடத்தில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை தனி நபர் ஒருவர் வாங்கி, கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு அனுமதியுடன், சிலிக்கான் தாது மணல் குவாரி அமைத்துள்ளார்.இதற்காக, அவ்விடத்தில் 500க்கும் மேற்பட்ட தென்னை, பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மேலும், அந்த இடத்தில் 24 அடி ஆழத்திற்கு மணல் அள்ள அனுமதி பெற்று மணல் அள்ளப்படுகிறது. இதனால், தம்பிக்கோட்டை வடகாடு மற்றும் தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து, கடல் நீர் உள் புகுந்து உப்பு நீராக மாறும் அபாயம் உள்ளது.'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான இப்பகுதியில், மணல் குவாரி அனுமதிக்கபட்டதற்கு எதிராக, கிராம சபை கூட்டங்களில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் அரசு செவி சாய்க்கவில்லை' என கூறி, கிராம மக்கள் நேற்று கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.இதற்கிடையே, இந்த இடத்தில் மணல் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில், வரும் 11ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.