உடைந்த பாலம் சீரமைப்பு
தஞ்சாவூர்: சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில், தரைப்பாலம் உடைந்ததால், போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், இரவோடு இரவாக சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து இயக்கப்பட்டது. சென்னை -- கன்னியாகுமரி இடையிலான, கிழக்கு கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே புதுத்தெருவில், காட்டாறு வடிகால்வாயில், 30 ஆண்டு பழமையான தரைப்பாலம் நேற்றுமுன்தினம் திடீரென உடைந்தது. இதனால், போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், இரவோடு இரவாக, சாலையை தற்காலிகமாக சீரமைத்து, போக்குவரத்து செல்லும் வகையில் தயார் செய்தனர். நேற்று வழக்கம்போல, போக்குவரத்து இயங்கியது. 'பாலம் முழுமையாக விரைவில் சீரமைக்கப்படும்' என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறினர்.