கோவில் நிதியில் கல்லுாரிகள் பா.ஜ.,வுக்கு உடன்பாடு கிடையாது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், பா.ஜ., தேசிய செயலர் ஹெச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: ஹிந்து சமய அறநிலையத்துறை யாரோட அப்பன் சொத்தும் கிடையாது. ஹிந்து கோவில்கள் மக்களுடையது; அரசாங்கத்துக்குரியது அல்ல. கோவில் பணத்தில் கல்லுாரி கட்டுவது கோவில் வேலை இல்லை. இதில், பா.ஜ.,வுக்கு உடன்பாடு இல்லை. அறநிலையத்துறை நிதியில் கல்லுாரிகள் கட்டுவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது. பழனி கோவில் நிதியில் உள்ள கல்லுாரியில், எப்படி இஸ்லாமிய ஆசிரியர்களை நியமிக்க முடியும்? கும்பகோணத்திலும், காஞ்சிபுரத்திலும் எத்தனை சாத்தானின் கூடங்கள் உள்ளன என்று பேசிய மோகன் சி.லாசரஸை ஏன் கைது செய்யவில்லை? ஹிந்து மதத்தை திருடுவது, மிஸ் யூஸ் செய்வது எல்லாம் சேகர்பாபு என்ற ஹிந்து விரோத தீய சக்தி தான். அறங்கெட்ட நபர்; புளுகு பேர்வழி அறநிலையத்துறை அமைச்சராக எப்படி இருக்கலாம்? மிகப்பெரிய கொடையாளரான சிவ நாடார் கொடுத்த நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் நிதியில், திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் நடத்திவிட்டு, அமைச்சர் சேகர்பாபு ஏன் பெயர் வாங்க வேண்டும்? மத்திய நிதியமைச்சரை பார்த்து உதயநிதி கேட்ட கேள்வியை, சேகர்பாபுவை பார்த்து நான் கேட்கிறேன். திருச்செந்துாரில் செலவானது உங்க அப்பன் விட்டு பணமா? ஹிந்துக்களை ஏமாற்றாதீங்க. ஹிந்து கோவில்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அறநிலையத்துறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதை வரும் 2026ல் பா.ஜ., முன்னெடுக்கும்.திருப்புவனம் கோவில் காவலாளி அஜித் மரணத்தில், எஸ்.பி., - டி.எஸ்.பி., போலீசார் அனைவரும் கொலை குற்றவாளிகள். முதலில் எஸ்.பி., கைது செய்யப்பட வேண்டும். அஜித் மீது பொய் புகார் கொடுத்த பெண் மீது கிரிமினல் வழக்குகள் உள்ள நிலையில், அவரை கைது செய்யாதது ஏன்? அந்த பெண்ணுக்கு, டில்லி ஐ.ஏ.எஸ்., அதிகாரியுடன் தொடர்பு இருப்பதாக முதல்வர் அலுவலகத்தில் சந்தேகம் எழுப்புகின்றனர். அது குறித்து விசாரிக்குமாறு, பா.ஜ., சார்பில் சி.பி.ஐ.,யிடம் மனு கொடுக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.