ஆடிட்டரிடம் பெற்ற ரூ.1 கோடி இன்ஸ்பெக்டரிடம் பறிமுதல்
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே குலசேகரநல்லுாரில், கொள்ளிடம் ஆற்றில், தடுப்பணை பாலம் விரிவாக்கத்துக்காக, கும்பகோணம், ராமசாமி கோவில் தெருவைச் சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரனின், 80 சென்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்தில் இருந்த, 30 தேக்கு மரங்களை ரவிச்சந்திரன், அரசு அனுமதி இன்றி வெட்டியதாக எழுந்த புகாரில், பந்தநல்லுார் போலீசார் விசாரித்தனர்.ரவிச்சந்திரன் சில ஆண்டுகளுக்கு முன், கன்னியாகுமரில் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்த போது, அங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய, நெப்போலியனுடன் பழக்கம் ஏற்பட்டது.அப்போது, தேக்கு மரம் வெட்டியதால் ஏற்பட்ட வழக்கு தொடர்பாக, நெப்போலியனிடம், ரவிச்சந்திரன் கூற, வழக்கில் இருந்து விடுபட உதவுவதாக கூறி, அவரிடம், நெப்போலியன் 1 கோடி ரூபாய் பெற்றுள்ளார். ஆனால், எந்த உதவியும் செய்யவில்லை. மேலும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் புகாரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, தர்மபுரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நெப்போலியனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கோடி ரூபாயை போலீசார் கைப்பற்றினர்.நெப்போலியன் கன்னியாகுமரி, தக்கலை, கரூர், தர்மபுரி மாவட்டங்களில் பணியாற்றியதால், ரவிச்சந்திரன் போல, வேறு யாரையும் ஏமாற்றினாரா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.