ஆய்வின் போது போனில் பேசிய பொறியாளரை எச்சரித்த மேயர்
தஞ்சாவூர், :தஞ்சாவூர், மாநகராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பகுதியான டபீர்குளம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை மாநகராட்சி மேயர் ராமநாதன் ஆய்வு செய்தார். அவருடன் கவுன்சிலர் பாலசுப்பிரமணியன், மாநகர நல அலுவலர் சுபாஷ்காந்தி, உதவிப்பொறியாளர் ஆனந்தி உள்ளிட்ட மாநகராட்சி ஊழியர்கள் உடன் சென்றனர்.அப்போது, பொதுமக்கள் கூறும் குறைகளை, குறிப்பு எடுக்க சொல்லி, மாநகராட்சி அலுவலர்களிடம் மேயர் கூறினார். ஆனால், மக்கள் கூறும் குறைகளை எவ்வித குறிப்பும் எடுக்காமல், மாநகராட்சி உதவிப்பொறியாளர் ஆனந்தி என்பவர், தன் மொபைலில் பேசியபடி இருந்தார். அவரின் செயலை பார்த்து கோபமடைந்த மேயர், சட்டென ஆனந்தியின் மொபைல் போனை பறித்து, 'ஸ்விட்ச் ஆப்' செய்து, தன் பாக்கெட்டிற்குள் வைத்துக்கொண்டார்.ஆய்வுப் பணிகளை முடித்து விட்டு, ஆனந்தியை அழைத்த மேயர், 'பணியின் போது போனில் பேசக்கூடாது. மக்கள் குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் பிரச்னைகளை குறிப்பெடுக்க வேண்டும்' என அறிவுரை வழங்கி, மொபைலை ஆனந்தியிடம் திருப்பி வழங்கினார்.