துா ய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தனியார் நிறுவனம் சம்பளம் வழங்கியதால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நேற்று முதல் வேலைக்கு திரும்பினர்.பெரியகுளம் நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 10 பேர் மட்டுமே உள்ளனர். சுகாதார பணி மேற்கொள்ள தனியார் நிறுவனம் 2025 ஜன., முதல் ஒப்பந்தம் எடுத்தனர். இதில் தினமும் 13 டன் குப்பை சேகரிப்பு பணிக்கு 79 சுகாதார பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இதற்காக ஒப்பந்ததாரருக்கு நகராட்சி ஆண்டுக்கு ரூ.1.60 கோடி வழங்குகிறது. இந்த நிறுவனம் சுகாதார பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, காப்பீடு பிடித்தம் போக தினமும் ரூ.440 சம்பளம் நிர்ணயம் செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் தனியார் நிறுவனம் பிப்ரவரி சம்பளம் மார்ச் 8 வரை வழங்கவில்லை. இதனால் தூய்மை பணியாளர்கள் மார்ச் 8,9 இருநாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். நேற்று சம்பளம் வங்கி கணக்கில் வரவானதால் தூய்மை பணியாளர்கள் வேலைக்கு திரும்பினர்.என்ன காரணம்: வழக்கமாக ஒப்பந்த நிறுவனம் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்த பின் நகராட்சியிடம் பணம் பெற்று கொள்ள வேண்டும். ஆனால் ஒப்பந்தாரர் நகராட்சி பணம் பெற்ற பிறகு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என 'வீம்பு' செய்ததால் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் நகரில் சுகாதாரம் பாதித்தது. ஒப்பந்தம் ரத்தாகிவிடும் என அச்சத்தில் நேற்று காலை வங்கி கணக்கில் பணியாளர்கள் சம்பளத்தை வரவு வைத்தது.