மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 35 பேர் கைது
தேனி: கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஓய்வூதியர் 35 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி கலெக்டர் அலுவலகம் முன் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட மூவர் குழுவை கலைக்க கோரியும் ரோடு மறியல் போராட்டம் நடந்தது. இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் தலைமை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் சென்னமராஜ், மாநில நிர்வாகி முகமது அலி ஜின்னா முன்னிலை வகித்தனர். சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், சத்துணவு, அங்கன்வாடி ஒய்வூதியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்டோர் மறியலில் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.