புத்தாண்டு நாளில் டூவீலர் ரேஸ் தடுக்க நடவடிக்கை அவசியம்
தேனி: மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவில் டூவீலர் ரேஸ் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புத்தாண்டிற்கு முந்தையநாள் இரவு அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கமாகி உள்ளது. ஆனால், இளைஞர்கள் சிலர் மாவட்டத்தின் முக்கிய ரோடுகளில் டூவீலர் ரேஸ் செல்வது அதிகரித்துள்ளது. இதனால் பல இடங்களில் புத்தாண்டு தினத்தில் விபத்துக்கள் பதிவாகி வருகிறது. ரேஸ் செல்பவர்கள் மட்டுமின்றி மற்ற வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி காயமடைந்து, உடல் உறுப்புகளை இழக்கின்றனர். ரேஸ் பயிற்சிக்காக இப்போது பல இடங்களில் முக்கிய ரோடுகளில் டூவீலர்களில் சிலர் அதிவேகத்தில் செல்வது அதிகரித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரேஸ் செல்வோரை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.