பஸ் வசதி இன்றி சிரமம்
போடி: போடியில் இருந்து சன்னாசிபுரத்திற்கு ரோடு வசதி இருந்தும் பஸ் வசதி இல்லாததால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சன்னாசிபுரம் கிராமம். போடியில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு செல்ல ரோடு வசதி இருந்தும் பஸ் வசதி இல்லாமல் உள்ளது. இங்கு ஆரம்ப பள்ளி மட்டுமே உள்ளது. நடுநிலை, மேல்நிலைப் பள்ளியில் படிக்க 2 கி.மீ., தூரம் நடந்து, சைக்கிள், டூவீலர், ஆட்டோவில் போடிக்கு செல்லும் நிலையில் மாணவர்களும், அத்தியாவசிய பொருட்கள் பெற பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் காலை, மாலை இரு நேரங்களில் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. போடியில் இருந்து சன்னாசிபுரத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர அரசு போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.