சிகிச்சை பெற வசதி இன்றி மலைவாழ் மக்கள் தவிப்பு: ஒரு வாரத்தில் இருவர் பலி
மூணாறு : இடமலைகுடி ஊராட்சியில் ரோடு, வாகனம் ஆகிய வசதிகள் இன்றி சிகிச்சை பெற இயலாமல் கடந்த ஒரு வாரத்தில் இருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூணாறு அருகே அடர்ந்த வனத்தில் உள்ள இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். அங்கு ரோடு, மருத்துவம் உட்பட அடிப்படை வசதிகள் மிகவும் குறைவு என்பதால் மலை வாழ் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்குள்ள செட்டுகுடியில் வசிக்கும் உத்ரகுமார் மனைவி அமிர்தவல்லிக்கு 50, மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதற்கு சிகிச்சை பெற சொசைட்டிகுடியில் உள்ள சுகாதார மையத்திற்கு ஆக.25ல் சென்றார். அவரை மேல் சிகிச்சை பெற வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அரசு சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் பழுதடைந்த நிலையில் ஜீப்பில் செல்ல மூணாறு வரை ரூ.5 ஆயிரம் கட்டணம் கேட்கப்பட்டதால் பணம் இன்றி மருத்துவமனைக்கு செல்வதை கைவிட்டனர். இந்நிலையில் அமிர்தவல்லியின் உடல் நிலை நேற்று காலை மோசமானதால் சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறந்தார். இது போன்ற காரணத்தால் கூடலார்குடியைச் சேர்ந்த மூர்த்தி, உஷா தம்பதியினரின் மகன் கார்த்திக் 6, காய்ச்சல், வயிற்று போக்கு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற இயலாமல் ஆக.22ல் இறந்தார். இடமலைகுடி ஊராட்சியில் ரோடு, வாகனம் உட்பட அடிப்படை வசதி இன்றியும், வறுமையாலும் கடந்த ஒரு வாரத்தில் இருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இடுக்கி கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.