ஹைடல் டூரிசம் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
மூணாறு: கேரளாவில் சி.ஐ.டி.யு.வைச் சேர்ந்த ஹைடல் டூரிசம் ஊழியர்கள் சங்கம் சார்பில், நேற்று (அக்.26ல்) முதல் நடக்க இருந்த காலவரையற்ற போராட்டம் கைவிடப்பட்டது. இம்மாநிலத்தில் மின்துறை சார்பில், ஹைடல் டூரிசம் மையங்களில் 180 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு போனஸ், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வீட்டு வாடகை வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் ஹைடல் டூரிசம் ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று (அக்.26ல்) முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜா, ஹைடல் டூரிசம் இயக்குனருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக அங்கீகரிக்கப்படும் என இயக்குனர் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்ட ஊழியர்கள் நேற்று வழக்கம் போல்பணிக்கு சென்றனர்.