உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணையில் பிடிபடும் மீன்கள் எண்ணிக்கை  அதிகரிப்பு ! நீர்மட்டம் குறைவதால் தினமும் 600 கிலோ வரை வரத்து

வைகை அணையில் பிடிபடும் மீன்கள் எண்ணிக்கை  அதிகரிப்பு ! நீர்மட்டம் குறைவதால் தினமும் 600 கிலோ வரை வரத்து

ஆண்டிபட்டி : வைகை அணையில் கடந்த சில மாதங்களுக்கு பின் நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால் பிடிபடும் மீன்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.வைகை அணை நீர்த்தேக்கத்தில் மீன்வளத்துறை மற்றும் மீன்பிடி ஒப்பந்ததாரர் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மீன் குஞ்சுகள் வளர்ப்புக்காக விடப்படுகின்றன. வளர்ந்த மீன்களை பதிவு பெற்ற மீனவர்கள் மூலம் ஒப்பந்ததார்கள் பிடித்து ஆண்டு முழுவதும் விற்பனை செய்கின்றனர். வைகை அணை நீர்மட்டம் முழு அளவான 71 அடி உயரும் போது நீர் தேக்கப் பரப்பு 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்து இருக்கும். கடந்த ஆகஸ்டில் அணை நீர்மட்டம் 70 அடிவரை உயர்ந்தது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் அணை நீர்மட்டம் அக்டோபர் 13 ல் 62 அடி வரை குறைந்தது. அடுத்தடுத்து பெய்த மழையால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக அக்டோபர் 27ல் 70.24 அடியானது. பரந்து விரிந்த நீர்த்தேக்கத்தில் பிடிபடும் மீன்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. அணைக்கான நீர் வரத்து குறைந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக அணையில் தொடர்ந்து நீர் வெளியேறியதால் தற்போது நீர்மட்டம் 61 அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் குறைவதால் கடந்த சில வாரங்களில் தினமும் 100 முதல் 200 கிலோ வரை பிடிபடும் மீன்களின் அளவு தற்போது தினமும் 500 முதல் 600 கிலோ வரை வரத்து உயர்ந்துள்ளது. மீன்கள் கிடைக்காமல் திரும்பிச் சென்ற பலரும் தற்போது தேவையான அளவு மீன்கள் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 40 பரிசல்களில் மீன்பிடிப்பு மீன்கள் விற்பனையாளர்கள் கூறியதாவது: வைகை அணையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பல லட்சம் எண்ணிக்கையிலான விரலி அளவிலான கட்லா, மிருகாள், ரோகு வகை மீன் குஞ்சுகள் வளர்ப்புக்காக விடப்பட்டன. ஏற்கனவே அணையில் இயற்கையாக வளரும் ஜிலேபி, சொட்டை வாளை , பறவை கெண்டை, ஆறாவகை மீன்களும் உள்ளன. இந்நிலையில் புதிதாக விடப்பட்ட மீன் குஞ்சுகள் தற்போது ஒரு கிலோ முதல் 10 கிலோ வரை வளர்ந்துள்ளது. நீர்மட்டம் உயரும்போது நீர்த்தேக்க பரப்பு அதிகமாகும். மீன்கள்ஆழத்திற்கு செல்வதால் பிடிபடும் மீன்களின் எண்ணிக்கை குறையும். தற்போது நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால் பிடிபடும் மீன்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்கிறது. வைகை அணை தீர்த்ேதக்கத்தில் பதிவு பெற்ற மீனவர்கள் தினமும் 40க்கும் மேற்பட்ட பரிசல்களில் சென்று மீன்கள் பிடித்து வருகின்றனர். வைகை அணை நீர்த்தேக்கத்தை ஒட்டி உள்ள வைகை அணை, சொக்கத்தேவன்பட்டி, காமக்காபட்டி ஆகிய இடங்களில் மீன்பிடி மையங்கள் மூலம் மீன்கள் விற்பனை ஆகிறது. தற்போது டோக்கன் முறையில் கிலோ ரூ.130க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடல் மீன்களை விட வைகை அணை மீன்கள் சுவை அதிகம் என்பதால் பொதுமக்கள் பலரும் காத்திருந்து காலையில் விற்பனை செய்யப்படும் மீன்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி