இடுக்கியில் பருவ மழை 37 சதவீதம் குறைவு
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை நேற்று முன்தினம் கணக்குபடி 37 சதவீதம் குறைவு என தெரியவந்தது. கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்தைவிட முன்கூட்டியே மே 24ல் துவங்கியது. எனினும் காலநிலை காலண்டர்படி தென்மேற்கு பருவ மழை ஜூன் 1 முதல் செப்.30 வரை கணக்கிடப்படுகிறது. அதன்படி தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வர சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில் இடுக்கி மாவட்டத்தில் ஜூன் ஒன்று முதல் நேற்று முன்தினம் வரை 1563.8 மி.மீ., மழை பெய்தது. இதே கால அளவில் 2481 மி.மீ., மழை பெய்ய வேண்டும் என்பதால் 37 சதவீதம் மழை குறைவு என தெரியவந்தது. மாநிலத்தில் மழை குறைவு பட்டியலில் வயநாடு மாவட்டம் முதலிடத்திலும், இடுக்கி மாவட்டம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. தற்போது மாவட்டத்திற்கு மழை முன்னெச்சரிக்கை எதுவும் இல்லை என்றபோதும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே நிலை தொடரும் என கணிக்கப்பட்டு உள்ளபோதும் மழை குறைவை ஈடு செய்ய இயலாது என தெரியவந்தது. இம்மாவட்டத்தில் பருவ மழை குறைவு என்றபோதும், அதன் மூலம் பாதிப்புகள் அதிகரித்தன. குறிப்பாக விளை நிலங்கள், விளை பொருட்கள் ஆகியவை பெரும் அளவில் சேதமடைந்தன.