எந்த கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிபட்டியில் அ.ம.மு.க. போட்டி தினகரன் பேட்டி
ஆண்டிபட்டி: 'எந்த கூட்டணியில் இருந்தாலும் வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் அ.ம.மு.க., போட்டியிடும்' என அக் கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் கூறினார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 38வது நினைவு நாளை முன்னிட்டு ஆண்டிபட்டியில் உள்ள அவரது சிலைக்கு அ.ம.மு.க., பொதுச் செயலாளர் தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்செய்தியாளரிடம் கூறியதாவது: 2026 சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க.,வை தவிர்த்து எந்த கூட்டணியும் வெற்றி பெற முடியாது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.ம.மு.க., கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் எங்களது வாக்கு வங்கி அதிகரித்து, எங்கள் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளோம். அ.ம.மு.க., விற்கும், தமிழக மக்களுக்கும் எது சரியோ அந்த முடிவை எடுப்பேன். அ.ம.மு.க.,வை தங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று பெரிய கட்சிகளும், புதிய கூட்டணியை உருவாக்க விரும்பும் கட்சிகளும் தொடர்ந்து அணுகி வருகின்றனர். நாங்கள் எந்த முடிவு எடுக்கப் போகிறோம் என்பது வரும் தை மாதத்தில் அறிவிக்கப்படும். எந்த கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிபட்டி தொகுதியில் அ.ம.மு.க.,வேட்பாளர் போட்டியிடுவார் என்பதை உறுதியாக சொல்கிறேன். 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யார் வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கத்தோடு நாங்கள் போட்டியிட்டோம். நாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் அந்த நோக்கம் வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டசபைக்குள் செல்வது உறுதி. கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல உள்ளோம் என்றார்.