தேனி அரசு மருத்துவமனையில் போலீசிடமிருந்து தப்பிய கைதி
தேனி:தேனி அல்லிநகரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் தேக்கம்பட்டி சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்ட கைதி சுபாஷ்சங்கர் 25, உடல்நலம் குன்றிய நிலையில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற நிலையில் தப்பினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி பொம்மையகவுண்டன்பட்டி மீனாதேவி 43. இவரது மூத்த மகன் சுபாஷ்சங்கர். கூலிதொழிலாளி. திருமணம் முடித்து தனியாக வாழ்ந்து வந்தார். தாய் மீனாதேவியிடம் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்தார். இந்நிலையில் அக்.,3ல் பணம் கேட்டு தொந்தரவு செய்த போது மீனாதேவி பணம் கொடுக்கவில்லை. ஆத்திரத்தில் தாயாரை தாக்கி வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மீனா தேவி புகாரில் சுபாஷ்சங்கரை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர். தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். மாவட்ட சிறை அருகே சென்ற போது உடல்நலக்கோளாறு ஏற்பட்டதாக போலீசாரிடம் சுபாஷ்சங்கர் தெரிவித்தார். அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன் போலீசாரிடம் இருந்து சுபாஷ்சங்கர் தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.