மூடப்பட்ட 207 அரசு பள்ளிகளில் மீண்டும் மாணவர்களை சேர்க்க முயற்சி: அமைச்சர் மகேஷ் தகவல்
திருநெல்வேலி: ''தமிழகத்தில் மாணவர் சேர்க்கையின்றி மூடப்பட்ட 207 பள்ளிகளில், மீண்டும் மாணவர் சேர்க்கைக்கு முயற்சி செய்து வருகிறோம்,'' என, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டம் தோறும் தலைமையாசிரியர்களுடன் ஆய்வு கூட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று திருநெல்வேலி நேருஜி சிறுவர் கலையரங்கில், அமைச்சர் மகேஷ் தலைமையில் கூட்டம் நடந்தது. அமைச்சர் மகேஷ் கூறியதாவது: எந்த அரசும் பள்ளிகளை மூட விரும்புவதில்லை. மூடிய வரலாறும் இல்லை. கடந்த கல்வியாண்டு முதல் இந்த கல்வியாண்டு வரை புதிதாக 4 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிகள் மூடப்பட்டதாக செய்திகள் வருகின்றன. உண்மையில் மூடப்பட்ட, 207 பள்ளிகளில், மாணவர்கள் இல்லாதது, மக்கள் தொகை குறைவு, கொரோனா கால இடம் பெயர்வு போன்ற காரணங்களால் அந்த நிலை ஏற்பட்டது. அப்பகுதிகளில் உள்ள மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி 2015 முதல் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதுவும் மாணவர் சேர்க்கை குறைவுக்கு ஒரு காரணம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இ - ரிஜிஸ்டர் படி, அரசு பள்ளிகளில் சேர்க்க களப்பணிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி பள்ளிகள் திட்டம்
துாத்துக்குடியில் அமைச்சர் மகேஷ் கூறுகையில், ''ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதால் அங்கு பயிலக்கூடிய மாணவர்கள் சிறந்த உயர் கல்வியில் சேர்ந்துள்ளனர். அதற்கு அடுத்த கட்டமாக வெற்றி பள்ளிகள் என்ற திட்டத்தில் தமிழகம் முழுதும் ஒரு யூனியனுக்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் 500 மாதிரி பள்ளிகள் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது,'' என்றார்.