உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லை அருகே பயங்கர விபத்து; இரு கார்கள் மோதலில் 7 பேர் பலி

நெல்லை அருகே பயங்கர விபத்து; இரு கார்கள் மோதலில் 7 பேர் பலி

திருநெல்வேலி : நெல்லை அருகே நான்கு வழிச்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மீடியனை கடந்து, எதிர் திசையில் வந்த கார் மீது மோதிய விபத்தில், குழந்தை உட்பட ஏழு பேர் பலியாகினர்.கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் தாணுமூர்த்தி, 41. இவரது மனைவி பாலகிருஷ்ணவேணி, 36. மகன் சுபிசந்தோஷ், மகள் பிரியதர்ஷினி. இவர்கள் உட்பட மேலும் சிலர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, 'மாருதி டிசையர்' காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தாணுமூர்த்தி ஓட்டினார்.கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், நாங்குநேரியை கடந்து தளபதிசமுத்திரம் என்ற இடத்தில் கார் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மீடியன் மீது மோதி, எதிர்திசையில் சென்றது.அப்போது, நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வந்து கொண்டிருந்த, 'டொயோடா இன்னோவா' கார் மீது, தாணுமூர்த்தி ஓட்டி வந்த கார் பயங்கரமாக மோதியது. இதில், இரு கார்களும் அப்பளமாக நொறுங்கின.இன்னோவா காரை மாரியப்பன் என்பவர் ஓட்டினார். அவரது மனைவி அன்பரசி, மகன் பிரவீன், மகள் அஸ்வினி மற்றும் மாரியப்பனின் தாய் உள்ளிட்டோர் அந்த காரில் பயணித்தனர். இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றவர்கள் மீட்கப்பட்டு, வள்ளியூர் மற்றும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில், மேலும் மூவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இரு கார்களில் வந்தவர்களில் யார், யார் இறந்தனர் என்ற விபரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.இறந்தவர்களின் உடல்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டன. கலெக்டர் சுகுமார், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் உள்ளிட்டோர் பலியானவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

m.arunachalam
ஏப் 28, 2025 06:48

என்ன சிந்தனையுடன் இவர்கள் வாகனம் ஓட்டுகிறார்கள்? கும்மாளமும், குதுகூலமும் சாலையில் தேவையா? வண்டியின் வேகம், பயணம் செய்த நபர்களின் எண்ணிக்கை அனைத்திலும் தவறு இருக்க வாய்ப்புள்ளது. தெளிதல் நலம் .


எம். ஆர்
ஏப் 28, 2025 04:05

மாருதி கார்கள் சீமெண்ணை தகடு 2 குத்து விட்டால் ஓடுங்கி விடும் நகரத்திற்குள் ஓட்ட வேண்டுமானால் லாயக்கி தொலைதூர பயனத்துக்கு இதை நம்பி போனால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது ஓரளவு தாங்குவது பிரெஸ்ஸாவும் இப்போது கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட டிசையர் மாடல் கார்கள் மட்டுமே மற்றவையெல்லாம் வேஸ்ட் தகுடு பலம் கிடையாது எடையும் கம்மி அதனால்தான் மைலேஜ் அதிகம் தருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை