33 முதல்வர் மருந்தகம் நாளை திறப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 33 'முதல்வர் மருந்தகம்' நாளை திறக்கப்பட உள்ளது.தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில், 1,000 'முதல்வர் மருந்தகம்' திறக்கப்பட உள்ளது. அங்கு, 'ஜெனிரிக்' மருந்துகள், 'சர்ஜிக்கல்ஸ்', சித்தா, ஆயுர்வேதம், யுனானி மற்றும் பிற மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும்.திருவள்ளூர் மாவட்டம் முழுதும், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 18, தொழில்முனைவோர் வாயிலாக 15 என, மொத்தம் 33 'முதல்வர் மருந்தகம்' அமைக்கப்பட்டு உள்ளது.அவைகளுக்கு, மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து மருந்துகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் பயனடையும் வகையில், மருந்து வகைகள், 25 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். அனைத்து முதல்வர் மருந்தகங்களும், உட்கட்டமைப்பு வசதிகளுடன், மருந்தக உரிமம் பெறப்பட்டு தயார் நிலையில் உள்ளது.இந்த நிலையில், திருவள்ளூர் வி.எம்.நகரில் உள்ள 'முதல்வர் மருந்தக' கடையினை, கலெக்டர் பிரதாப், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சண்முகவள்ளி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.