உள்ளூர் செய்திகள்

நிர்ணயம்!

சாலையோர வியாபாரிகளுக்கு ஆண்டு கட்டணம்... அத்துமீறிய ஆக்கிரமிப்புகளை தடுக்க நடவடிக்கைதிருவள்ளூர், ஜூலை 1– பெருநகரங்களில் உள்ளதுபோல், சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தும் முயற்சியில் திருவள்ளூர் நகராட்சி களமிறங்கியுள்ளது. ஆண்டு விற்பனை கட்டணம் நிர்ணயிப்பதால், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, அத்துமீறிய ஆக்கிரமிப்புகளையும் தடுக்க முடியும் என, நகராட்சி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், ஜெ.என்., சாலை – சி.வி.நாயுடு சாலை மற்றும் குளக்கரை தெரு சந்திப்பான காமராஜர் சிலை அருகில், தேரடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன. அவற்றால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகாரின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகமும், காவல் துறையினரும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின் போது, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, சாலையோர வியாபாரிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, கடந்த 2014ம் ஆண்டு, மத்திய அரசு சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாத்தல் மற்றும் சாலையோர வியாபாரம் ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டத்தை நிறைவேற்றியது. மேலும், தமிழக வியாபாரிகள் திட்டம் மற்றும் விதிகள் – 2015 எனும் சட்டமும் வகுக்கப்பட்டது. அந்த சட்டங்களின்படி, திருவள்ளூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோரம் வியாபாரம் செய்வோரின் விவரங்கள் குறித்த கணக்கெடுப்பு, கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பில், திருவள்ளூர் நகராட்சி பகுதியில், 931 பேர் சாலையோர வியாபாரிகளாக இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சாலையோர வியாபாரிகளை வழிநடத்த, திருவள்ளூர் நகர விற்பனை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் தலைவராக நகராட்சி கமிஷனரும், நியமன உறுப்பினர்களாக ஒரு மருத்துவ அலுவலர், ஒரு நகரமைப்பு ஆய்வாளர், சட்டம் – ஒழுங்கு மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் இருவர், வணிகர் சங்க பிரதிநிதி ஒருவர், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதி ஒருவர், தொண்டு நிறுவன நிர்வாகிகள் இருவர், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் ஆறு பேர் என, 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிற்கு, திருவள்ளூர் நகர சாலையோர வியாபாரிகளிடம் இருந்து, விற்பனை கட்டணம் வசூலிக்க, நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருவள்ளூர் நகரத்தில், விற்பனை பகுதிகளாக ஏற்படுத்தப்பட்ட இடங்களில், சாலையோர வியாபாரிகளாக கண்டறியப்பட்டவர்களுக்கு, விற்பனை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் தாமோதரன் கூறியதாவது: கடந்த காலங்களில், சாலையோர வியாபாரிகளிடம் வரி வசூலிக்க, ஆண்டுதோறும் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்படும். அவர்கள், நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த ஒப்பந்த தொகையை முன்னரே செலுத்தி விட்டு, சாலையோர வியாபாரிகளிடம் தினமும் சென்று, விற்பனை கட்டணத்தை வசூலித்துக் கொள்வர். தனிநபர் வசூலால் சில நேரங்களில், சாலையோர வியாபாரிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவ்வப்போது, சாலை ஆக்கிரமிப்பு எனக் கூறி, ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், வியாபாரிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்துள்ளன. முதல் கட்டமாக, தற்போது நகர விற்பனை குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையோர வியாபாரிகளிடம் நகராட்சி நிர்வாகமே, நேரடியாக விற்பனை கட்டணத்தை வசூலிக்க உள்ளது. இதற்காக, முழு நேரம், பகுதி நேரம், தலைச்சுமை, நகரும் வாகனம் மற்றும் வாகனம் இல்லாத வியாபாரிகள் என, 5 வகைப்பாடுகள் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் விற்பனை செய்யும் இடத்தின் அளவிற்கு ஏற்ப, வியாபாரிகளுக்கான ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அந்த கட்டணத்தை, வியாபாரிகள் ஒரே தவணையில் செலுத்த வேண்டும். வரும் ஆக., 1ம் தேதி முதல், சாலையோர வியாபாரிகளிடம் இருந்து, விற்பனை கட்டணம் வசூலிக்கப்படும். ஆண்டு விற்பனை கட்டணம் நிர்ணயிப்பதால், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதோடு, அத்துமீறிய ஆக்கிரமிப்புகளையும் தடுக்க முடியும். மேலும், சாலையோர வியாபாரிகளுக்கு ஏதாவது இடையூறு, பிரச்னை ஏற்பட்டால், நகர விற்பனை குழுவிடம் புகார் தெரிவிக்கலாம். அந்த குழுவினர், பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைக்கும். சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, சான்றிதழ் வழங்கப்படும். அவர்களின் வியாபாரத்தை மேம்படுத்த, வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். வியாபாரிகள் வரவேற்பு விற்பனை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து சாலையோர வியாபாரிகள் கூறியதாவது: சாலையோரங்களில் பூ, பழம், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். அவ்வப்போது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக கூறி, அதிகாரிகளும், போலீசாரும் அகற்றி விடுகின்றனர். அப்போது, விற்பனைக்கு வைத்துள்ள பொருட்கள் சேதமடைந்து, எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது, நகர விற்பனை குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினரிடம் ஆண்டு கட்டணம் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர். மேலும், எங்களுக்கு பாதுகாப்பும், வங்கி கடனும் கிடைக்கும் என்பதால், எங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். கடை அளவு / வகைப்பாடு 10 ச.அடி 10 – 25 ச.அடி 25 ச.அடிக்கு மேல் ஆண்டு கட்டணம் – ரூபாயில். நிலையான முழுநேர வியாபாரிகள் 750 1,500 3,000 நிலையான பகுதிநேர வியாபாரிகள் 375 750 1,500 மோட்டார் வாகனம் உள்ள வியாபாரிகள் 750 1,500 3,000 மோட்டார் வாகனம் இல்லாத வியாபாரிகள் 375 750 1,500 தலைச்சுமை வியாபாரிகள் 250


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ