காந்திநகரில் குறைந்த மின்னழுத்தம் குடியிருப்புவாசிகள் சாலை மறியல்
சோழவரம்:சோழவரம் அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தெரு, பெரியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று காலை குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டது.இதனால், குடியிருப்புவாசிகளின் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டதுடன், வீட்டு உபயோக பொருட்களும் பழுதடைந்தன.இதனால் கடும் அவதிக்குள்ளான குடியிருப்புவாசிகள், இந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் வழங்கும் வடகரை துணை மின்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.பகல், 12:30 மணி வரை குறைந்த மின்னழுத்தம் பிரச்னை தீர்க்கப்படாத நிலையில், அதிருப்தி அடைந்த 50க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள், காந்திநகரில் உள்ள செங்குன்றம் - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த சோழவரம் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.குறைந்த மின்னழுத்தம் சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, குடியிருப்புவாசிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.