உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சார் -– பதிவாளர் ஆபீஸில் ‘சர்வர்’ கோளாறால் அவதி

சார் -– பதிவாளர் ஆபீஸில் ‘சர்வர்’ கோளாறால் அவதி

திருவாலங்காடு: திருவாலங்காடு சார் –- பதிவாளர் அலுவலகத்தில், அடிக்கடி ஏற்படும் சர்வர் கோளாறு பிரச்னைகளால், பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். திருவாலங்காடு சார் – பதிவாளர் அலுவலகத்தின் கீழ் திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டார 60 கிராமங்கள் வருகின்றன. இங்கு, சொத்து விற்பனை, அடமானம் மற்றும் திருமண பதிவுகள் என 20 முதல் 30 பதிவுகள் நடக்கின்றன. கடந்த சில நாட்களாக, இங்குள்ள கணினிகளில் இணைய இணைப்பில் கோளாறு அல்லது பழுது காரணமாக ‘சர்வர் முடக்கம்’ ஆவதால், பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. ஒரு நாளைக்கு திட்டமிடப்பட்ட பதிவுகளை முடிப்பதில், அலுவலர்களும் சிரமம் அடைந்துள்ளனர். இதனால், தொலை துார கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்கள், தேவையின்றி பல மணி நேரம் காத்திருந்து, மன உளைச்சல் அடைகின்றனர். விவசாயம் உள்ளிட்ட தங்களது அன்றாட பணிகளை விட்டு வரும் பொதுமக்கள், பல நேரங்களில் மற்றொரு நாள் வரச்சொல்லி அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இணையதள இணைப்பை சீரமைக்க, உயர்மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தடையற்ற இணைய சேவை வழங்க கூடுதல் வசதிகளைச் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !