டி.வி.எஸ்., லுாகாஸ் கிரிக்கெட் அசோக் லேலண்ட் அணி வெற்றி
சென்னை, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், மாவட்ட அளவிலான லுாகாஸ் டி.வி.எஸ்., கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை, மாவட்டத்தின் பல பகுதிகளில் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம்,ஆவடி ஓ.சி.எப்., மைதானத்தில் நடந்த 'குரூப் - ஏ' பிரிவினருக்கான 'லீக்' ஆட்டத்தில், வருங்கால வைப்பு நிதி ஊழியர் அமைப்பு மற்றும் எண்ணுார் அசோக் லேலண்ட் அணிகள் எதிர்கொண்டன.முதலில் பேட்டிங் செய்த, வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அசோக் லேலண்ட் வீரர் கணேஷின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 14.4 ஓவர்களில் 'ஆல் - அவுட்' ஆகி, 54 ரன்களில் ஆட்டமிழந்தது. கணேஷ், 18 ரன்கள் மட்டுமே கொடுத்து, ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.அடுத்து பேட்டிங் செய்த, எண்ணுார் அசோக் லேலண்ட் அணி, ஐந்து ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டும் இழந்து, 55 ரன்களை அடித்து வெற்றி பெற்று, ஆட்டத்தை சுலபமாக முடித்தது.'குரூப் - பி' ஆட்டத்தில், லுாகாஸ் டி.வி.எஸ்., அணி, 28.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து, 169 ரன்களை அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த, வெள்ளிவாயல்சாவடி அசோக் லேலண்ட் அணி, 26.4 ஓவர்களில் நான்கு விக்கெட் மட்டும் இழந்து, 171 ரன்களை அடித்து, வெற்றி பெற்றது.