திருத்தணியில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இயக்கம்
திருத்தணி: தீபாவளியையொட்டி, திருத்தணியில் இருந்து வெளியூர் செல்லும் பயணியர் வசதிக்காக, 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. திருத்தணி வருவாய் கோட்டத்தில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஊழியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வசதியாக, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை சார்பில், திருச்சி, விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கு, 25 சிறப்பு பேருந்துகள் நேற்று முன்தினம் முதல் இயக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த சிறப்பு பேருந்துகள், அக்., 23ம் தேதி வரை, திருத்தணி, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும்' என்றார்.