தினமலர் செய்தி எதிரொலி முதல்வர் பண்ணை அருகே 50 மீ., சாலை சீரமைப்பு
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் ஊளுந்தை ஊராட்சியில் முதல்வர் பண்ணை தோட்டம் அருகே ஓராண்டாக கிடப்பில் கிடந்த நெடுஞ்சாலையை சீரமைத்தனர்.கடம்பத்துார் ஒன்றியம், தண்டலம் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில் உளுந்தை ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து, வயலுார் செல்லும் இந்த நெடுஞ்சாலை கிராம சாலை திட்டத்தின் கீழ், 4.50 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி, 2023ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கி நடந்து வந்தது. ஏழு மீட்டர் அகலத்தில் 2.2 கி.மீ., துாரமுள்ள இந்த நெடுஞ்சாலைபணிகள் முடிந்து ஓராண்டாகியும், இங்கிருந்து வயலுார் செல்லும் சந்திப்பு பகுதியில், 50 மீ., துாரம் சீரமைப்பு பணி நிறைவடையாமல் ஜல்லிக்கற்கள் பரவி கிடந்ததால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் நடந்து செல்வோர் கடும் சிரமப்பட்டு வந்தனர். தமிழக முதல்வர் இளைப்பாறும் பண்ணை தோட்டம் அமைந்துள்ள ஊராட்சியிலேயே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை சீரமைப்பு பணியில் அலட்சியம் காட்டுவது, பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சைாலத்துறையினர் நெடுஞ்சாலையை சீரமைத்தனர்.