கல் குவாரி நடத்திய 7 பேர் கைது: 8 வாகனங்கள் பறிமுதல்
நகரி:நகரி அருகே, மணல் கடத்திய ஏழு டிப்பர் லாரி, ஒரு 'பொக்லைன்' இயந்திரம் உட்பட எட்டு வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், ஏழு பேரை கைது செய்தனர்.சித்துார் மாவட்டம், நகரி அடுத்த தடுக்குப்பேட்டையில் அனுமதியின்றி கல்குவாரி இயங்கி வந்தது. இங்கிருந்து தினமும் டிப்பர் லாரிகள் வாயிலாக மணல் மற்றும் ஜல்லிகற்கள் நகரி, திருப்பதி மற்றும் திருத்தணி வழியாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கடத்தப்பட்டன.இந்நிலையில், நகரி டி.எஸ்.பி., சையது முகமது அஜீஸ் தலைமையிலான போலீசார் நேற்று காலை, மேற்கண்ட கல்குவாரியில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, அனுமதியின்றி கல் குவாரி நடத்தி வந்த ஏழு பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதையடுத்து ஏழு டிப்பர் லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பிச் சென்ற ஏழு பேரை, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு, 7:00 மணியளவில், தமிழக - ஆந்திர மாநில எல்லையான பொன்பாடி சோதனைச்சாவடி அருகே பதுக்கியிருந்த புருஷோத்தமன், சேகர், இந்திரகுமார், கிஷோர், ரமேஷ், கணேஷ்ரெட்டி உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.