கும்மிடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் இடத்தை பார்வையிட்ட நீதிபதி குழு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக, நீதிபதிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு சாலையில் உள்ள வாடகை கட்டடம் ஒன்றில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. கும்மிடிப்பூண்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க, கடந்தாண்டு, கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராம சர்வே எண்: 297, 298க்கு உட்பட்ட 2.47 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற வளாகம் அமைப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், வேறு இடம் தேர்வு செய்ய அறிவுறுதப்பட்டது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள, சென்னை உயர்நீதிமன்ற திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு நீதிபதிகள் வேல்முருகன், சக்திவேல் ஆகியோர் தலைமையிலான குழுவினர், நேற்று கும்மிடிப்பூண்டி வந்தனர். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையிலான வருவாய் துறையினர், இடங்களை காண்பித்தனர். வருவாய் துறையினர் காண்பித்த மூன்று இடங்களும், மேய்க்கால் மற்றும் மந்தவெளி புறம்போக்கு நிலங்களாக இருந்தன. 'வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் இருந்தால் காண்பிக்கவும் அல்லது கும்மிடிப்பூண்டி நகரை சுற்றி 5 கி.மீ.,க்கு அரசு புறம்போக்கு நிலங்கள் இல்லை என அறிக்கை அளித்து, நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும்' என, கலெக்டரிடம் நீதிபதி குழுவினர் தெரிவித்து சென்றனர்.