காட்சிப்பொருளான கழிவுநீர் ஊர்தி ரூ.46 லட்சம் வீணாகும் அவலம்
பொன்னேரி, பொன்னேரி நகராட்சியில், 46 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட கழிவுநீர் ஊர்தி, ஒன்பது மாதங்களாக பயன்பாடின்றி வீணாகி வருகிறது. பொன்னேரி நகராட்சியில், கடந்தாண்டு நவம்பர் மாதம், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், 46 லட்சம் ரூபாயில், 6,000 லிட்டர் கொள்ளளவு உடைய கழிவுநீர் ஊர்தி வாகனம் வாங்கப்பட்டது. பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து கழிவுநீரை சேகரித்து, திருவள்ளூர் நகராட்சியில் உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது. இதற்காக, குடியிருப்புகளுக்கு லோடு ஒன்றிற்கு, 2,000 ரூபாயும், வணிக நிறுவனங்களுக்கு லோடு ஒன்றிற்கு, 3,000 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த வாகனத்தை இயக்க ஓட்டுநர், கழிவுநீரை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் பயிற்சி பெற்ற பணியாளர் என, இருவரை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி கொள்ளவும், அவர்களுக்கு ஊதியம் வழங்கவும், ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நகராட்சி நிதியும் ஒதுக்கப்பட்டது. கழிவுநீர் வாகனம் வாங்கி ஒன்பது மாதங்களான நிலையில், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல், நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வீணாகி வருகிறது. வாகனம் பயனின்றி ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அதன் உதிரி பாகங்கள் செயலிழக்கும் நிலை உள்ளது. சரியான திட்டமிடல் இன்றி வாகனத்தை வாங்கிவிட்டு, அதை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருப்பது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மக்களின் வரிப்பணம் வீணாகி வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.