திருத்தணி: திருத்தணியில் செயல்பட்டு வரும் வேளாண் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், 30 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில், குறுகிய இடத்தில் இயங்கி வருகிறது. திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில், 330க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான கிராமங்களில், விவசாயமே பிரதான தொழில். விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில், நிலம் சீர்திருத்தம் செய்தல், விவசாய பணிகளுக்கு தேவையான கருவிகள் வாடகைக்கு விடுதல், மானிய விலையில் விவசாயிகளுக்கு கொள்முதல் செய்து கொடுத்தல், விவசாய கருவிகளை அரசிடம் இருந்து பெற்று தருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் மானிய திட்டங்களை விவசாயிகள் பெற வசதியாக, திருத்தணி நகரில் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம், 40 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டது. இந்த உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு, 30 ஆண்டுகளாக சொந்த கட்டடம் இல்லாமல், திருத்தணி ம.பொ.சி., சாலை மற்றும் சித்துார் சாலையில் இயங்கி வருகிறது. தற்போது, சித்துார் சாலையில் உள்ள குண்டலுார் பகுதியில், வாடகை வீட்டில் குறுகிய இடத்தில் இயங்கி வருகிறது. இதனால், விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதில்லை. இதற்கு காரணம், குறுகிய இடத்தில் இயங்கி வருவதால், விவசாயிகளை அழைத்து பேச முடியவில்லை. எனவே, திருவள்ளூர்கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, வேளாண் பொறியியல் துறை அலுவலகத்திற்கு, சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.