ஆமூர் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
பொன்னேரி:மாதவரம் - ஆமூர் இடையேயான சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்தும், பள்ளங்கள் ஏற்பட்டும், போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். பொன்னேரி அடுத்த மாதவரத்தில் இருந்து, ஆமூர் கிராமத்திற்கு செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஆங்காங்கே சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன. ஒரு சில இடங்களில் சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது. ஆமூர், நெடுவரம்பாக்கம், அகரம், மாலிவாக்கம், வடக்குப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தோர், பொன்னேரிக்கு சென்றுவர இச்சாலையை பயன்படுத்துகின்றனர். சாலை சேதமடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். ஒரு சிலர் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவ- மாணவியர் சைக்கிளில் பயணிக்கும்போது கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.