பிளஸ் 2 மாணவர் மீது தாக்குதல் ஆவடியில் சிறுவர்கள் அராஜகம்
ஆவடி:ஆவடியில், அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவரை, 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி காமராஜர் நகர், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் தேவி, 40. இவரது 17 வயது மகன், காமராஜர் நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். அந்த மாணவன் தனியாக செல்லும்போது, கால் வைத்து இடிப்பது, சைக்கிளில் வந்து மோதுவது என, அதே பள்ளியில் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். கடந்த 7ம் தேதி, சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டிற்கு, அந்த மாணவர் செல்லும்போது, 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள், தேவியின் மகனை சூழ்ந்து கொண்டு வீண் தகராறு செய்து, சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தேவியின் மகனை மாணவர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர், நேற்று முன்தினம் இரவு, ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.