அரசு பள்ளியை காணவில்லை அரசை கண்டித்து பேனர்
பொன்னேரி: ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டாமல், இருப்பதை கண்டிக்கும் வகையில், 'பள்ளியை காணவில்லை' என, மார்க்சிஸ்ட் கட்சியினர் பேனர் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொன்னேரி நகராட்சி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உள்ள, அரசு நடுநிலைப்பள்ளியில், 1 -8ம்வகுப்பு வரை, 145 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில், நான்கு வகுப்பறைகள் கொண்ட, இரண்டு கட்டங்கள் இருந்தன. கட்டடங்கள் சேதமானதை இடித்து விட்டு, புதிய கட்டடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. அதுவரை, பள்ளி மாணவர்கள், 100 மீ. தொலைவில் இருக்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் கட்டடத்திற்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டனர். கடந்த ஒரு ஆண்டிற்கு முன், சேதம் அடைந்த ஆதி திராவிடர் பள்ளியின் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆனால், இதுவரை புதிய கட்டடங்களுக்கான கட்டுமான பணிகள் துவங்க வில்லை. அதற்கான ஒப்பந்தமே இதுவரை விடவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு அமைப்புகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை. தற்போது பள்ளி கட்டடம் இருந்த இடம் ஆட்டோ நிறுத்தமாக மாறி உள்ளது. இந்நிலையில், மேற்கண்ட ஆதிதிராவிடர் பள்ளிக்கு கட்டடம் அமைக்காததை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் 'ஆதி திராவிடர் பள்ளியை காணவில்லை' என பேனர் வைக்கப்பட்டு உள்ளது.