நகராட்சியாக மாற்ற எதிர்ப்பு வேப்பம்பட்டில் முற்றுகை
திருவள்ளூர், வேப்பம்பட்டு ஊராட்சியை, நகராட்சி யாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராமவாசிகள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் அருகில் உள்ள ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது. மேலும், சில ஊராட்சிகளை இணைத்து, தனியாக பேரூராட்சி, நகராட்சியாக மாற்றப்படுவதாகவும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இதற்கு பல்வேறு ஊராட்சி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வேப்பம்பட்டு ஊராட்சியுடன் அருகில் உள்ள சில ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக மாற்றப்பட உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வேப்பம்பட்டு ஊராட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, 'தங்கள் பகுதியை நகராட்சியாக தரம் உயர்த்தாமல், ஊராட்சியாக தொடர வேண்டும்' என கோஷமிட்டனர். பின், கலெக்டரை சந்தித்து எதிர்ப்பு மனுவை வழங்கினர்.