| ADDED : பிப் 17, 2024 11:24 PM
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த அயத்துாரில் கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்து கூறியதாவது: கன்று வீச்சு நோய், 'ப்ருசெல்வா அபார்ட்ஸ்' என்ற நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய் பாதித்த கால்நடைகளில், கன்று வீச்சு மற்றும் மலட்டுத் தன்மை ஏற்பட்டு வாழ்நாள் முழுதும் கன்று ஈனாத நிலை ஏற்படும்.இந்நோய் தாக்கிய மாடுகளில் இருந்து பெறப்படும் பால் மற்றும் கன்று ஈனும் போது வெளிவரும் கர்ப்பப்பை திரவம் வாயிலாக, மனிதர்களுக்கும் நோய் பரவும் அபாயம்உள்ளது.கன்று வீச்சு தடுப்பூசி 4- - 8 மாத கிடாரி கன்றுகளுக்கு மட்டும் வாழ்நாள் தடுப்பூசியாக ஒரு முறை செலுத்துவதால், கால்நடைகளுக்கு வாழ்நாள் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். திருவள்ளூர் மாவட்டத்தில் இத்தடுப்பூசி ஏற்கனவே முதல் இரண்டு சுற்றுகளில் 31,000 கிடாரி கன்றுகளுக்கு போடப்பட்டு உள்ளது. மூன்றாவது சுற்று தடுப்பூசி முகாம், மார்ச் 15 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.