உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பஜார் வீதியில் நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

பஜார் வீதியில் நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

திருவள்ளூர்: திருவள்ளூர் பஜார் வீதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திருவள்ளூர் நகரின் பிரதான பகுதியாக பஜார் வீதி உள்ளது. இந்த பகுதியில் காய்கறி மார்க்கெட், மளிகை, நகை கடைகள், பூஜை பொருள் விற்பனை மற்றும் டீக்கடைகள் அதிகளவில் உள்ளன. மேலும், பஜார் அருகே பிரசித்தி பெற்ற வீரராகவர் கோவில், தீர்த்தீஸ்வரர் கோவில்கள் அமைந்துள்ளன. இதனால், பொது மக்கள், வியாபாரிகள் என, ஆயிரக்கணக்கானோர் பஜார் வீதிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு வருவோரில் பலரும் கார்களிலும், இருசக்கர வாகனத்திலும் வருகின்றனர். காய்கறி வாங்க வருவோர், தங்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்துகின்றனர். இதன் காரணமாக சாலை குறுகி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், ஆட்டோ, கார்கள் வரும்போது கடும் நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும், மக்களும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அமாவாசை, தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில், பஜார் வீதியில் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. எனவே, திருவள்ளூர் நகர போக்குவரத்து போலீசார், கார்களை நெரிசல் நேரத்தில் இயக்க தடை விதிக்க வேண்டும். மேலும், ஒரு வழிப்பாதையாக மாற்றினால், நெரிசலுக்கு மாற்றாக இருக்கும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை