சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகள்: விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ஊத்துக்கோட்டை:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, ஊத்துக்கோட்டை பேரூராட்சி. ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர், புத்துார், நகரி, திருப்பதி, கடப்பா, கர்நுால், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு, ஊத்துக்கோட்டை பஜார் பகுதி வழியே வாகனங்கள் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். மேலும், சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு இந்த சாலையை பயன்படுத்தி ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர். இப்பகுதியில் மாடுகள் வளர்ப்போர், அவற்றை வீடுகளில் கட்டி வைக்காமல், சாலையில் திரிய விடுவதால், இவை இரவு நேரங்களில், வீடுகளுக்கு செல்லாமல் சாலையின் நடுவே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையில் திரிய விடும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரித்தும், எவ்வித பலனும் இல்லை. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.