உள்ளூர் செய்திகள்

நோய் அபாயம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில், 10.54 கோடி ரூபாய் மதிப்பிலான திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் வீணாகியுள்ளது. சாலையோரம் குப்பை குவிந்து வருவதால் ஏற்படும் துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருவதோடு, தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.திருவள்ளூரில் சாலையோரம் குவிக்கப்படும் குப்பையால்...ரூ.11 கோடி திடக்கழிவு மேலாண்மை திட்டம் முடக்கம்திருவள்ளூர், ஜன. 12-திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகளில், மட்கும் குப்பையிலிருந்து மண்புழு உரம் தயாரிக்க, 2017- - 18ம் ஆண்டு, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தலா, 1 லட்சம் ரூபாய் மதிப்பில், 5.26 கோடி ரூபாய் மதிப்பில் மண்புழு உரக் கொட்டகை அமைக்கப்பட்டது.இந்த உரக் கொட்டகையில் அமைக்கப்பட்ட தொட்டிகளில், வீடுகளில் சேகரிக்கப்படும் மட்கும் குப்பையான காய்கறி, பழம் போன்றவை கொட்டப்பட்டு மண்புழு தயாரித்து விற்பனை செய்யும் நோக்கத்தில் துவங்கப்பட்டது.

குப்பை பிரச்னை

ஆனால், இந்த மண்புழு உரக் கொட்டகை அமைக்கப்பட்டதோடு சரி, இன்று வரை 526 ஊராட்சிகளிலும் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து வீணாகியுள்ளது. சில ஊராட்சிகளில் இருந்த இடமே தெரியாத அளவுக்கு மாயமாகி உள்ளது.இந்நிலையில், 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கடம்பத்துார் ஒன்றியத்தில் கடம்பத்துார், வெங்கத்துார், மப்பேடு, பேரம்பாக்கம், மற்றும் திருவள்ளூர், சோழவரம், வில்லிவாக்கம். பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, எல்லாபுரம், மீஞ்சூர் ஆகிய 10 ஒன்றியங்களில், 22 ஊராட்சிகளில் தலா 24 லட்சம் ரூபாய் மதிப்பில், 5.28 கோடி ரூபாய் மதிப்பில் உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டன.இதில், கடம்பத்துார் ஊராட்சியில் மட்டும் இன்று வரை உரக்கிடங்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெறாதது குறிப்பிடத்தக்கது.இதனால், குப்பை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரக்கிடங்கு

ஆனால், இன்று வரை எந்த ஊராட்சியிலும், 24 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட உரக்கிடங்குகள் முறையான பயன்பாட்டிற்கு வராமல் திட்டம் வீணாகியுள்ளது.இதற்கான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதிலும் பல ஊராட்சிகளில் குழப்பம் நிலவி வருவதும், திட்டத்தை முறையாக செயல்படுத்தாமைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேலும், பகுதிவாசிகள் முழுமையான ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதில், வெங்கத்துார் ஊராட்சியில் அரசு நிலத்தில் கட்டி முடிக்கப்பட்ட உரக்கிடங்கு, பகுதிவாசிகள் எதிர்ப்பால் செயல்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால், நெடுஞ்சாலையோரம் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டு, சென்னையில் உள்ள குப்பை கிடங்குகளுக்கு தினமும் லாரிகள் வாயிலாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், ஊராட்சிக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆனால், கட்டி முடிக்கப்பட்ட உரக்கிடங்குகள் செயல்பாடு குறித்து அரசுக்கு தெரிவிக்கும் வகையில் பெயரளவிற்கு பணிகள் நடந்து வருவது போல, போட்டோ எடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும் பணிகளையும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு பல திட்டங்கள் நிறைவேற்றியும் முறையான பயன்பாடில்லாததால் நீர்நிலைகளில் குப்பை கொட்டக்கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏரி, குளங்கள், ஆறு போன்ற நீர்நிலைகளில் குப்பை கொட்டப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளில் குப்பை கொட்டப்படுவதை தடுக்கவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேணடும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஊராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதில் பகுதிவாசிகள் ஒத்துழைப்பு இல்லாததால், பல பகுதிகளில் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து, விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை