வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி ஏகனாபுரம் விவசாயிகள் எதிர்ப்பு
ஏகனாபுரம் : சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்துார் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 20 கிராமங்களில், 5,746 ஏக்கரில் அமைய உள்ளது.இதில், 3,774 ஏக்கர் பட்டா நிலமும், 1,972 ஏக்கர் அரசு நிலமாக உள்ளன. தனியார் பட்டா நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை, வருவாய்த் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.அதேசமயம் ஏகனாபுரம் கிராமத்தினர், பலவிதமான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 810வது நாளாக, இரவு போராட்டம் நடந்து வருகிறது.அதைத் தொடர்ந்து நேற்று, ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட விமான நிலையத்தால் பாதிக்கப்படும் கிராம குடியிருப்பு பகுதிகளில், கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதையடுத்து, தண்டலம் ஊராட்சி நெல்வாய் கிராமத்தில், தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கி, பரந்துார் வட்டார விவசாயிகளுடன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.மேலும், மச்சேந்திரநாதனின் அறிக்கை வெளியிட வேண்டும். விவசாயிகளின் அனுமதி இல்லாமல் நிலம், வீடுகளை கையகப்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட, நிபந்தனைகளை முன்வைத்தனர்.இதில் நாகப்பட்டு, ஏகனாபுரம், நெல்வாய், வளத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.