எஸ்.அக்ரஹாரம் ஏரியில் முதியவர் உடல் மீட்பு
திருத்தணி, திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஏரிக்கு, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் மற்றும் பரவத்துார் ஆகிய ஏரிகளில் இருந்து உபரிநீர் நீர்வரத்து கால்வாய் வழியாக தண்ணீர் தொடர்ந்து வருகிறது.தற்போது, ஏரி முழு கொள்ளளவு எட்டும் நிலையில் உள்ளது. நேற்று காலை, மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர், தங்களது கால்நடைகளை ஏரியின் அருகே மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றனர்.அப்போது ஏரியில், ஒரு முதியவர் உடல் மிதந்துக் கொண்டிருந்ததை கண்டனர். திருத்தணி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிந்து வந்து, ஏரியில் மிதந்த முதியவரின் உடலை மீட்டனர்.இறந்தவர், 65 வயது இருக்கலாம், அவர் குறித்த விபரம் எதுவும் தெரியவில்லை. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.